‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹசரங்கா - ஆனால் போட்டியில் இலங்கை தோல்வி
டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற 25வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிசன்கா 72 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணியின் ஷம்ஸி மற்றும் ப்ரெடோரியஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட தென்னாப்பிரிக்கா அணியில் கேப்டன் பவுமா 46 ரன்கள் எடுக்க, இலங்கை அணி வீரர் ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முட்டுக்கட்டைப் போட்டார்.
அதனால் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 15 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த டேவிட் மில்லர் 2 சிக்சர்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் தென்னாப்பிரிக்கா 19.5 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்து த்ரில் வெற்றிபெற்றது.