2வது ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி - தொடரை இழந்தது இந்தியா
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்களில் ரிஷப் பண்ட்(85), கேப்டன் கே.எல்.ராகுல்(55), ஷர்துல் தாக்கூர் (40) சிறப்பாக ஆட இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் அதிகப்பட்சமாக சாஸ்மி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட தென்னாப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக் 78 ரன்களும், மாலன் 91 ரன்களும் விளாச அந்த அணியின் வெற்றி எளிதானது. மேலும் மார்கிராம், வான் டெர் டுசன் ஆகியோர் தலா 37 ரன்கள் எடுக்க இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.