அண்ணாமலைக்கு ஜாதி வெறி; அப்படி மட்டும் நடந்தால் பாஜகவிலிருந்து விலகுவேன் - விளாசிய எஸ்.வி.சேகர்
அண்ணாமலைக்கு ஜாதி வெறி இருப்பதாக எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
எஸ்.வி.சேகர்
பாஜக மூத்த தலைவரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் நிச்சயமாக பாஜக வளர்ந்திருக்கு. அதற்கு முக்கியமான காரணம் மோடியின் இமேஜ்தான்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் திமுகவுக்கு எதிராக குறைகளையே சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? இவர் பாஜகவுக்கு என்ன செய்திருக்கிறார். அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் கிடையாது. இவர் தோசை சுட வந்திருப்பதாக யாராவது நினைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் நான் அதற்காக வரவில்லை என உளறுகிறார்.
மோடிதான் பிரதமர்
அண்ணாமலை இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. பிராமணர் அல்லாத தலைவர் என்பதாலேயே அண்ணாமலை கட்டம் கட்டப்படுகிறார் என்பது தவறான கருத்து. அண்ணாமலைக்கு ஜாதி வெறி இருக்கிறது. இது விரைவில் நிரூபணமாகும். தமிழகத்தில் பிராமணர்களுக்கென ஒரு கட்சியை தொடங்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இடஒதுக்கீட்டில் கூட பிராமணர்களுக்கு ஒன்றுமே இல்லை. பாஜக பிராமணர்களால் வளரப்பட்ட கட்சி. பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் பிராமணர்களை கேட்டால்தான் அவர்களது கஷ்டம் புரியும். ஒரு வேளை பிராமணர்களால் தொடங்க போகும் கட்சியை நான் வழிநடத்த வேண்டும் என அவர்கள் விரும்பினால் நான் பாஜகவிலிருந்து விலகுவேன்.
2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடியே மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக வருவார். ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி யார் பிரதமர் வேட்பாளராக இருந்தாலும் மோடிதான் பிரதமராவார் எனத் தெரிவித்துள்ளார்.