அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு - போலீசார் அதிரடி
கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது, திமுக பிரமுகர் ஒருவர் கள்ளநோட்டு போட முயற்சி செய்வதாக கூறி, அவரை அடித்து அரைநிர்வாணமாக்கி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஊர், ஊராக இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக ஜெயக்குமார் மீது தண்டையார் பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், பட்டினப்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் அதிரடியாக கைது செய்தனர்.
இதனையடுத்து, ஜெயக்குமார் மீது தமிழக அரசு உத்தரவை எதிர்த்து நோய் பரப்பும் செயலில் ஈடுபடுதல், தொழிற்சாலை அபகரிப்பு விவகாரம் உள்ளிட்ட 2 புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர் மீது மொத்தம் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதில், ஒரு வழக்கில் மட்டும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.
ஜெயக்குமார் கைது விவகாரம் திமுகவின் பழிவாங்கும் நோக்கத்தை குறிக்கிறது என்று அதிமுகவினர் கொந்தளித்தனர். இதனையொட்டி, திமுக அரசைக் கண்டித்தும், ஜெயக்குமார் கைதை கண்டித்தும் நேற்று அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திமுகவை விட காவல் துறையினரை அதிகமாக தாக்கிப் பேசினார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதாக காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார், தாமோதரன், செல்வராஜ், கந்தசாமி, அமுல் கந்தசாமி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.