6 டன் பாறையை குடைந்து பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திருவுருவம் - வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமா கடந்த 2020ம் ஆண்டு யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொரோனாவிலிருந்து மீண்டார். இருப்பினும் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி இந்த மண்ணை விட்டு மறைந்தார்.
லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் இடம் பிடித்த எஸ்.பி.பி. உடலுக்கு அவரது ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அவரது உடல் காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு எஸ்.பி.பி.யின் நினைவுநாளையொட்டி தந்தைக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார்.
ஓராண்டாக நடந்து வந்த இப்பணி தற்போது நிறைவடைந்துள்ளது.
இது குறித்து சிற்பக்கூடத்தினர் கூறியதாவது -
நாங்கள் ஏராளமான சிலைகள் வடிவமைத்திருக்கிறோம். பாறையை குடைந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் முகத்தை வடிவமைக்க திட்டமிட்டிருந்தோம். அதற்காக 6 டன் எடை கொண்ட பாறை திருவக்கரையில் பெறப்பட்டது.
6 மாதங்களாக இதற்காக பணி நடந்தது. சிற்பி கருணாகரன் குமார் தலைமையில் 6 சிற்பிகள் இதை வடிவமைத்துள்ளோம்.
இப்பணிகள் தற்போது நிறைவடைந்து பாறை தாமரைப்பாக்கம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அங்கு இதை பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.