இறந்து கண்ணை மூடிய தங்கை; தாங்க முடியாமல் விஜய் அப்போது செய்த காரியம்.. - S.A.C வேதனை!
தனது மகளின் இழப்பு குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். முன்னர் இளைய தளபதியாக இருந்து, இப்போது ரசிகர்களின் தளபதியாகவே மாறிவிட்டார். விஜய்க்கு சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பல ரசிகர்களின் சொந்த அண்ணனாகவே விஜய் மாறிவிட்டார். ஆனால் அவருக்கும் கூடப்பிறந்த ஒரு தங்கை இருந்தது. அவரின் பெயர் வித்யா. எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியின் மகள் வித்யா, அதாவது நடிகர் விஜய்யின் சொந்த தங்கை, சிறு வயதிலேயே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அந்த இழப்பு ஒட்டுமொத்த குடும்பத்தையே புரட்டிப் போட்டது.
குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் லுக்கிமியா நோயால் பாதிக்கப்பட்டு அந்த குழந்தை உயிரிழந்து. வித்யா என்றால் நடிகர் விஜய்க்கு உலகம். அவர் மீது அளவு கடந்த அன்பு, பாசம் வைத்திருந்தார். தனது தங்கையைப் பறிகொடுத்த சோகம் விஜய்யை பின்னர் அமைதியானவராக மாற்றியது. அண்மையில் எஸ்.ஏ.சந்திரசேகர்-ஷோபா தம்பதியினர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டனர்.
மிகப்பெரிய இழப்பு
அப்போது அவர்களிடம், வாழ்க்கையில் மிகவும் மிஸ் செய்யும் ஒருவர் பற்றிச் சொல்லவேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் "மகள் வித்யாவை இழந்தது வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பு. விஜய்யை 'டேய் அண்ணா' என்றே அன்புடன் அழைப்பார் வித்யா.
பேசிக்கிட்டே இருக்கும் போது போயிட்டு வரேன் என சொல்லி அவளைத் தூக்கினேன். அப்பவே வாயிலிருந்து ரத்தம் வந்தது. அப்படியே தூக்கிக் கொண்டு கோயில் குளம் என கூட்டிக்கொண்டு அலைந்தோம். அந்த சமயத்தில் டாக்டர் வந்து பார்த்து முடியவே முடியாது எனச் சொல்லிவிட்டார். அப்படியே என் மடியிலேயே தான் வைத்து இருந்தேன். அவ கண்ணை மூடியதும் விஜய் 'வித்யா' என அப்படி ஒரு சத்தம் போட்டான்.
அது இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு. அப்போது விஜய்க்கு 10 வயசு. இருவருக்கும் 6 வருஷம் வித்தியாசம். வயசு வித்தியாசம் அதிகமாக இருந்ததால் அவன் தங்கையை இழந்தது அவனால் தாங்க முடியவில்லை. அவள் இழப்பு எங்கள் குடும்பத்திற்கு மிகப் பெரிய லாஸ்" என்று அவர் பேசியுள்ளார்.