தவெகவில் இணைந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.
தவெகவில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்று, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மாற்று கட்சியை சேர்ந்த பலரும் அந்த கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்ததை தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் என பலரும் இணைந்தனர்.

கடந்த வாரம் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி, நடிகர் டி எஸ் ஆர் சீனிவாசன் அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், அதிமுக முன்னாள் எம்.பிக்கள் பாலகங்கா உள்ளிட்ட பலர் கட்சியில் இணைந்தனர்.
இரு நாட்களுக்கு முன்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்.
தவெகவில் இணைந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்
இன்று, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் ஆகியோர் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் கட்சியில் இணைந்துள்ளனர்.

தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்பம் எம்.எல்.ஏ. ஜெகன்நாத் மிஸ்ரா, தன்னுடைய நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்ததால்தான் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர். வந்தால் பதவி தருவோம் என கூறி வியாபாரம் செய்யும் கட்சி தவெக இல்லை.
புரட்சி தலைவி அம்மாவிற்கு பிறகு அதிமுக கட்சியின் தலைமை சரியில்லை. அதிமுக வழிமாறி செல்லும்போது முதல் ஆளாக குரல் கொடுத்தவர் நமது தவெக அமைச்சர் செங்கோட்டையன். 50 ஆண்டுகள் பழமைவாதியான அவரை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமையின் தவறு" என தெரிவித்துள்ளார்.