இந்திய அணியில் கால் பதித்த ருத்துராஜ் கெய்வ்க்வாட், வெங்கடேஷ் ஐயர்
தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ்வர் ஐயருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில், டெஸ்ட் தொடருக்கு பிறகு நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., இன்று அறிவித்துள்ளது.
காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத இந்திய அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மா, ஒருநாள் தொடரிலும் விளையாடவில்லை.
இதனால் கே.எல் ராகுல் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஜஸ்ப்ரிட் பும்ராஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகிய இளம் வீரர்களுக்கு ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் கிடைத்துள்ளது.
இது தவிர ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சாஹல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்களும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்தநிலையில், தங்களது திறமையின் மூலம் தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ருத்துராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ்வர் ஐயர் ஆகியோருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
முன்னாள் வீரர்கள் பலரும் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயரை மனதார பாராட்டி வருகின்றனர்.