சிஎஸ்கேன்னா சும்மாவா..சாதனைபடைத்த ருதுராஜ் - டு பிளெஸ்சிஸ்
ஐபிஎல் 2021 போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிநடை போடுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறார்கள் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெயிக்வாட்டும் டு பிளெஸ்சிஸும்.
அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இருவரும் தலா 400 ரன்களுக்கு மேல் எடுத்து 4 ( டு பிளெஸ்சிஸ்) மற்றும் 5-ம் (ருதுராஜ்) இடங்களைப் பிடித்துள்ளார்கள்.
ஐபிஎல் 2021 போட்டியில் ருதுராஜ் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 3 அரை சதங்களுடன் 407 ரன்கள் எடுத்துள்ளார்.
ஸ்டிரைக் ரேட் - 134.76. டு பிளெஸ்சிஸ் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 4 அரை சதங்களுடன் 435 ரன்கள் எடுத்துள்ளார்.
ஸ்டிரைக் ரேட் - 138.09. இந்நிலையில் இந்த ஜோடி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த வருடம் மேலும் பல ஆட்டங்களில் விளையாடவுள்ள நிலையில் அதற்குள் அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே கூட்டணி என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.
2013-ல் மைக் ஹஸ்ஸியும் ரெய்னாவும் 587 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே கூட்டணி என்கிற சாதனையைப் படைத்தார்கள்.
2020 வரை அவர்களுடைய சாதனை முறியடிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இந்தமுறை 11 ஆட்டங்களிலேயே ஹஸ்ஸி - ரெய்னா சாதனையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்கள் ருதுராஜும் டு பிளெஸ்சிஸும்.
இருவரும் ஐபிஎல் 2021 போட்டியில் இதுவரை 11 ஆட்டங்களில் 599 ரன்கள் எடுத்துள்ளார்கள். இவர்களிருவரும் குறைந்தது 3 அல்லது 4 ஆட்டங்களிலாவது விளையாடுவார்கள் என்பதால் எப்படியும் 700 ரன்களைக் கடந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல்: ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே கூட்டணி
ருதுராஜ் & டு பிளெஸ்சிஸ் - 599 ரன்கள் (2021)
மைக் ஹஸ்ஸி & ரெய்னா - 587 ரன்கள் (2013)
மைக் ஹஸ்ஸி & முரளி விஜய் - 540 ரன்கள் (2013)
மெக்கல்லம் - டுவைன் ஸ்மித் - 513 ரன்கள் (2014)
மைக் ஹஸ்ஸி - முரளி விஜய் - 481 ரன்கள் (2011)