சென்னை அணியில் களமிறங்குவாரா ருத்துராஜ் கெய்க்வாட்? - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. அதேசமயம் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் சுரேஷ் ரெய்னா, பாப் டூபிளெசிஸ், ஷர்துல் தாகூர், போன்ற வீரர்கள் இல்லாமல் களமிறங்குவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேபோல் ருத்துராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டனர். இதனால் சென்னை அணி கேப்டன் தோனி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே சென்னை அணி வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல்கள் பரவியது. தீபக் சாஹர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாதது, மொயீன் அலிக்கு மத்திய அரசு விசா வழங்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே நிச்சயம் விளையாடுவார் எனவும் சென்னை அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.