கணவர் ராணுவ வீரர் என தெரிந்ததும் உக்ரைனிய பெண்ணிடம் ரஷ்ய வீரர்கள் பாலியல் அத்துமீறல்
உக்ரைனில் ரஷ்ய படைகளால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கூறிய உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்து உள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததன் எதிரொலியாக அங்கு ரஷ்யா 48வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. கிட்டதட்ட 45 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
போரை நிறுத்த ரஷ்யா மறுத்தாலும் உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றும் ரஷ்ய படைகளின் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று லித்துவேனியா நாட்டு ஆட்சியாளர்களிடம் வீடியோ லிங்க் வழியாக பேசினார். அதில் ரஷ்ய படைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
இதில் இளம்பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் கூட துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், நாள்தோறும் அதிக அளவில் உடல்கள் புதைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே தனது கணவர் ராணுவ வீரர் என தெரிந்ததும் இரண்டு ரஷ்ய வீரர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என உக்ரைனிய பெண் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.