திடீரென வயல்வெளியில் தரையிறங்கிய விமானம்; அலறிய 159 பயணிகள் - என்ன நடந்தது?
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வயல்வெளியில் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்சின் 'ஏர்பஸ் ஏ320 ' விமானம் சைபீரியாவின் ஓம்ஸ்க் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 159 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் இருந்தனர். விமானம் ஓம்ஸ்க் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அடுத்த விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்துள்ளார். ஆனால் போதுமான எரிபொருள் இல்லாமல் இருந்துள்ளது. அப்போது கீழே இருந்த கிராமம் ஒன்றின் வெளியே காலி வயல்வெளி இருப்பதை வானிலிருந்து விமானிகள் கவனித்தனர்.
வயலில் தரையிறக்கம்
இதனையடுத்து நோவோசிபிர்ஸ்க் நகரில் உள்ள வயலில் விமானத்தை சாமர்த்தியமாகவும், பாத்திரமாகவும் விமானிகள் தரையிறக்கினர். இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் அனைத்து பயணிகளும் அருகிலுள்ள கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்துத் துறையானது விமானங்களின் புதிய உதிரிபாகங்களை வாங்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் விமானங்களை பழுது நீக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.