உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கினால் கணிக்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் - அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததன் எதிரொலியாக அந்நாட்டு மீது ரஷ்யா 50 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது.
இதனால் ஏராளமான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

எனினும் பல பகுதிகளில் உக்ரைன் ராணுவம் தக்க பதிலடியைக் கொடுக்க தொடங்கியதால் போர் தொடங்கிய அடுத்து சில நாட்களில் உக்ரைன் நாட்டில் ரஷ்யாவால் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற முடியவில்லை. குறிப்பாக தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய படைகள் பெரும் முயற்சி செய்தன.
ஆனால் உக்ரைன் நாட்டு வீரர்களின் எதிர்தாக்குதலால் அந்த நகருக்குள் நுழைய முடியவில்லை. இதையடுத்து கீவ்வை சுற்றியுள்ள படைகளை குறைத்துகொண்ட ரஷ்யா, தற்போது கிழக்கு உக்ரைன் பகுதி மற்றும் மரியுபோல் நகரம் மீது கவனம் செலுத்தி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த போரை நிறுத்துமாறு பல உலக நாடுகள ரஷ்யாவை கேட்டுக்கொண்ட போதிலும் தொடர்ந்து ரஷ்யா உகரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன.

இதனால், உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு வலியுறுத்தி உள்ள ரஷ்யா இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு தொடர்ந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றினால், "கணிக்க முடியாத விளைவுகள்" ஏற்படும் என அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.