ரஷ்யாவின் அடுத்த மாஸ்டர் பிளான் - பொதுமக்களை எச்சரிக்கும் உக்ரைன் : என்ன நடக்கிறது?
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டு அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதை எதிர்த்துவந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. தொடர்ந்து உக்ரைனின் விமான நிலையங்கள், கப்பல் படை உள்ளிட்ட உட்கட்டுமானங்களை சிதைக்கும் நோக்கில் ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அருகில் உள்ள நகரங்களில் சில வீடுகளின் மீது விநோத குறியீடுகள் இருப்பதாக தகவல் பரவ அந்நாட்டு அரசு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் உங்களது வீட்டின் மேல் தளத்திலோ அல்லது புகை போக்கி குழாயின் மீதோ ஏதேனும் குறியீடுகள் இருந்தால் உடனே அவற்றை நீக்க வேண்டும் என்றும், அந்த குறியீடுகள் ரஷ்ய ராணுவத்திற்கு அளிக்கப்படும் ரகசிய தகவல்களாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கீவ் நகரத்தில் உள்ள சில வீடுகளில் எதிரொளிப்பு குறியீடு இருந்தால் உடனடியாக சட்ட அமலாக்கத்துறையை தொடர்பு கொள்ளும்படி மேற்கு உக்ரைன் நகரமான ரிவினைன் மேயர் அலெக்ஸ்சாண்டர் ட்ரெடியாக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பு உக்ரைன் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.