உக்ரைன் மீதான தாக்குதலால் ரஷ்யாவுக்கு கண்டனம் - தோல்வியில் முடிந்த ஐ.நா. தீர்மானம்
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா முறியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

அங்கு வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என நடைபெறும் மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஆனால் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை முறியடித்தது. இதனால் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.