ரஷ்யா - உக்ரைன் இடையே முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை நிறைவு : போர் நீடிக்குமா?
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பெலாரசில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பல முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துள்ளது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 5 நாட்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்துவதால் அங்குள்ள பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதுஒருபுறமிருக்க இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்திய நிலையில் பெலாரசில் உள்ள கோமல் நகரில் இருநாட்டு பிரதிநிதிகளும் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது அனைத்து ரஷ்யப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என உக்ரைன் தரப்பு வலியுறுத்தியுள்ளது. அதேபோல் இருதரப்பும் பொதுவாக ஒப்புக்கொள்ளக்கூடிய சில கருத்துகளையும் கண்டறிந்ததாக உக்ரைன் அதிபர் மாளிகையின் ஆலோசகர் மைக்கேல் பொடோல்யாக் கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தரப்பு பிரதிநிதிகளும் சொந்த நாட்டு தலைநகர்களுக்கு திரும்பியுள்ளனர். அடுத்ததாக மிக விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியான பின்னர் ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.