உக்ரைன் - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியது
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் அமைதி சீர்குலைந்து, மக்கள் உயிர் பிழைக்க அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் எதிர்ப்பார்ப்பு, போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு, சமரச பேச்சுவார்த்தைக்குத்தான் உண்டு.
போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷ்யா இணங்கி வந்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் தாக்குதலில் இது வரை 4,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ள சிறைக்கைதிகள், ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட விரும்பினால் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் நாட்டை சேர்ந்த குழு இன்று பெலார்ஸ் சென்றது.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது.