செய்தி நேரலையின் போது திடீரென புகுந்த பெண் போராட்டக்காரர் - ரஷ்ய மக்களை பதறவைத்த வீடியோ

russia ukraine ukrainewar
By Petchi Avudaiappan Mar 15, 2022 04:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ரஷ்யாவில் செய்தி நேரலையின் போது திடீரென இளம்பெண் ஒருவர் பதாகையுடன் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது.

அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இப்போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் நிலையில் ரஷ்யாவில் செய்தி நேரலையின் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. 

அங்கு ஒளிபரப்பாகும் பெர்வி கானால் என்ற அரசு தொலைக்காட்சியில் செய்தியாளர் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு கொடிகள் வரையப்பட்ட பதாகையுடன் இளம் பெண் பத்திரிக்கையாளரான மரினா ஓவ்ஸியானிகோவா என்பவர் உள்ளே வந்தார். 

மேலும் அதில் போரை நிறுத்துங்கள். போலிப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். உங்களிடம்  இங்கே இருந்து கொண்டு பொய் சொல்கிறார்கள். ரஷ்யர்களுக்கு போரின் மீது விருப்பமில்லை என ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த சில நிமிடங்களில் இந்த காட்சிகள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.