உக்ரைனுடனான போரில் ரஷ்ய வீரர்கள் இவ்வளவு பேர் பலியா? - அதிகாரப்பூர்வ தகவல்
உக்ரைனுடனான போரில் இறந்த தங்கள் நாட்டு வீரர்களின் எண்ணிக்கையை ரஷ்யா முதன்முதலில் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக இதற்கான பணிகளில் இருந்த போது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறிய ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்களும், படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைனுடனான போரில் இறந்த தங்கள் நாட்டு வீரர்களின் எண்ணிக்கையை ரஷ்யா முதன்முதலில் வெளியிட்டுள்ளது. அதன்படி ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உக்ரைனுடனான போரில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,597 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் வீரர்கள் 2,870 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3700 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.