'உங்க பேச்சையெல்லாம் எங்களால கேட்க முடியாது’ - சர்வதேச நீதிமன்றத்துக்கு அதிர்ச்சியளித்த ரஷ்யா
போர் நிறுத்தம் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதனிடையே ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிடக்கோரியும், அந்நாட்டு படைகளை வெளியேற்றக் கோரியும் உக்ரைன் மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய, எந்தவொரு நடவடிக்கையிலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் ராணுவ பயன்பாடு என்பது மிகவும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தலைமை நீதிபதி ஜோன் டோனோகு தெரிவித்தார். இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த தீர்ப்பை ரஷ்யா மட்டுமல்லாமல் இரு தரப்பும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தீர்ப்பை அமல்படுத்த முடியும். ஆனால் இந்த தீர்ப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அமல்படுத்தவும் முடியாது. எனவே இந்த விவகாரத்தை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டு வரை உக்ரைன் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.