உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அதிரடி முடிவு - எதிர்பார்ப்பில் உலக நாடுகள்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதன் தொடக்கமாக தலைநகர் கீவ் அருகில் படையைக் குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததை எதிர்த்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. கிட்டதட்ட ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் தொடர்ந்து நடைபெறும் போரில் இருதரப்பிலும் ஏராளமான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. போரை நிறுத்த நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்ததால் உலக நாடுகள் பெரும் கவலையில் ஆழ்ந்தன.
போரை பொறுத்தவரை ரஷ்யா உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ், கார்கீவ் ஆகிய முக்கிய நகரங்களைக் குறி வைத்து தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் மக்கள் உடமைகளை இழந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே இருநாடுகளுக்கும் இடையே இன்று இரண்டாம் கட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் படையைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதாவது கீவ் அருகே செர்னிவ் மற்றும் செர்னோபில் பகுதியில் ரஷ்யப் படையைக் குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரஷ்ய பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த விளாடிமிர் மெடின்ஸ்கி கூறுகையில், மோதலைத் தணிக்க நாங்கள் இந்த இரண்டு நடவடிக்கையை எடுக்கிறோம் என்றும், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதில் ரஷ்யா எந்தவொரு எதிர்ப்பையும் காட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் விரைவில் உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.