‘’ உங்க பேச்சை கேட்க முடியாது ‘’ : சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் ரஷ்யா

russia ukraine internationalcourt
By Irumporai Mar 17, 2022 11:01 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 உக்ரைனில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ரஷ்யா, கடந்த மாதம்  24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஷ்யா மீதும், அதிபர் புதின் மீதும் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

இந்த நிலையில் , ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டில் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் நாடியது. ரஷ்யா மீதான குற்றச்சாட்டை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது, உலக நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளின் 13-2 என்ற வாக்குகள் அடிப்படையில், உக்ரைனில் நடத்தப்பட்டுவரும் ராணுவத் தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கான வாக்கெடுப்பில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி பெரும்பான்மைக்கு ஆதரவாக, அதாவது ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தார். உக்ரைன் விவகாரத்தில், பேச்சுவார்த்தை ஒன்றே போரின் முடிவுக்கு தீர்வாக அமையும் என இந்தியா நடுநிலை வகித்துவரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த நீதிபதி ரஷ்யாவுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் உக்ரைனில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்யா கூறியுள்ளது.