ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்
ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு விதமான தளர்வுகளை உலக நாடுகள் அளித்து வருகின்றது.
இதனிடையே ரஷ்யாவில் நேற்று மட்டும் 1,123 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,33,898ஆக உயர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு அனைத்து கடைகள், பள்ளிகள், விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மேலும் உணவு மற்றும் மருந்தகங்கள் தவிர அனைத்தையும் வருகிற நவம்பர் 7ஆம் தேதிவரை மூட ரஷ்ய அதிபர் விளாமிதிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் உள்நாட்டு தடுப்பூசியான ஸ்புட்னிக் வியை மக்களுக்கு செலுத்துவதில் அந்நாட்டு அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் மக்கள் தடுப்பூசிக்கு எதிர்ப்புக்காட்டி வருகின்றனர். இதுவரை 32% மக்கள் மட்டுமே அங்கு தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.