டிரம்ப்பை எதிர்த்து பேசிய ஜெலன்ஸ்கி - டிரம்ப் எப்படி அடிக்காமல் விட்டார் என கேக்கும் ரஷ்யா
டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையேயான அமைதி பேச்சுவார்த்தை காரசாரமான வாக்குவாதத்தில் முடிந்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர்
நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது போரை தொடங்கியது. 1,000 நாட்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது.
தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப், இந்த போரை நிறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ரஷ்யா அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
கனிமவள ஒப்பந்தம்
இதனை தொடர்ந்து ரஷ்யா அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் இல்லாமல் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்தார்.
உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்த பணத்தை உக்ரைன் தர வேண்டும் என கூறிய டிரம்ப், உக்ரைனில் உலகின் மொத்த அரிய வகை கனிமங்களில் 5% இருக்கும் நிலையில், பணத்துக்கு பதிலாக அந்த கனிமவளங்களை காலாவரையின்றி வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்தார்.
முதலில் இந்த நிபந்தனையை ஏற்க மறுத்த ஜெலன்ஸ்கி, டிரம்ப்பின் அழுத்தத்தால் ஒப்புக்கொண்டார். அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார். அங்குள்ள ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கரசராமான வாக்குவாதத்தில் முடிவடைந்தது.
ராஜாங்க அணுகுமுறை
முதலில் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், "அமைதி, வளத்துக்கான பாதை ராஜாங்க ரீதியிலான அணுகுமுறையாக மட்டுமே இருக்க முடியும். அதிபர் ட்ரம்ப்பும் அதையே செய்கிறார்.
குறுக்கிட்டு பேசிய ஜெலன்ஸ்கி, "ரஷ்யா 2014 முதல் உக்ரைனை ஆக்கிரமித்து வருகிறது. அமெரிக்கா புதினை தடுக்கவில்லை. எந்த ராஜிய நடவடிக்கைகள் குறித்து நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் வான்ஸ்? என்ன கூற விரும்புகிறீர்கள்" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜே.டி.வான்ஸ், "உங்கள் நாட்டின் அழிவை முடிவுக்குக் கொண்டுவரப் போகும் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி நான் பேசுகிறேன். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சி செய்வதற்கு அவருக்கு நீங்கள் நன்றிதான் கூற வேண்டும். கூறினீர்களா? இல்லை. அமெரிக்காவிற்கு வந்து உங்கள் நாட்டின் அழிவைத் தடுக்க முயற்சிக்கும் எங்கள் நிர்வாகத்தைத் தாக்கிப் பேசுவது மரியாதைக்குரியது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என தெரிவித்தார்.
ஆவேசமான டிரம்ப்
அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, போரின்போது எல்லோருக்குமே பாதிப்புகள் ஏற்படும். உங்களிடம் பெரிய கடல் பரப்பு இருப்பதால் இப்போது நீங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளவில்லை. ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள். என கூறினார்.
அப்போது குறுக்கிட டிரம்ப், "நாங்கள் எப்படி உணர வேண்டும் என்று கூறும் இடத்தில் நீங்கள் இல்லை. உங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. நீங்கள் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடியுடன் விளையாடுகிறீர்கள். நீங்கள் நிறைய பேசிவிட்டீர்கள். உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது. என ஆவேசமாக பேசினார்.
இதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, "போரின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் தனியாக இருக்கிறோம், நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நான் நன்றி சொல்லியிருக்கிறேன் என கூறினார்.
350 பில்லியன் டாலர் உதவி
தொடர்ந்து பேசிய டிரம்ப், "முட்டாள் அதிபர் பைடன் மூலமாக நாங்கள் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறோம். உங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கினோம். எங்களுடைய ராணுவ உபகரணங்கள் மட்டும் இல்லையென்றால், இந்த போர் 2 வாரங்களில் முடிந்திருக்கும். நீங்கள் இன்னும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் உங்களிடம் எந்த துருப்புச்சீட்டுகளும் இல்லை. ஆனால் நாங்கள் உங்கள் நாட்டிற்கான திட்டங்களை வைத்திருக்கிறோம். எங்களின் ஆதரவின்றி உங்களால் எதுவும் திட்டமிட முடியாது. உங்களின் அணுகுமுறைகள் மாற வேண்டியிருப்பதால் இந்த ஒப்பந்தம் கடினமானதாக இருக்கும்." என கூறினார்.
இந்த பேச்சுவார்த்தை காரசாரமாக முடிவடைந்ததையடுத்து, ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை. மேலும், இரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்திலும் கலந்து கொள்ளாமல் ஜெலன்ஸ்கி அங்கிருந்து வெளியேறினார்.
ரஷ்யா வரவேற்பு
இதனையடுத்து தனது ட்ரூத் சமூகவலைத்தளத்தில், “அமெரிக்க தலையீட்டில் அமைதி ஏற்படுவதை ஜெலன்ஸ்கி விரும்பவில்லை.அமைதியை ஏற்படுத்தும் மனநிலை ஏற்பட்டால் மட்டும் மீண்டும் வாருங்கள்" என டிரம்ப் பதிவிட்டார். டிரம்ப்பின் இந்த காரசாரமான பேச்சுக்கு ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.
இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த ரஷ்யா, "இதுவரை ஜெலன்ஸ்கி கூறிய பொய்களிலேயே மிகப்பெரிய பொய் 2022 ஆம் ஆண்டு உக்ரைன் எந்தவொரு ஆதரவும் இல்லாமல் தனியாக நின்றது என்று கூறியதுதான். எப்படி ட்ரம்ப் மற்றும் வான்ஸ் அந்த பொய்யாரை அடிக்காமல் விட்டார்கள் என்பது அதிசயம். ஜெலன்ஸ்கி ஒருவரிடமும் நன்றாக நடந்துகொள்வதில்லை. ஓவல் அலுவலகத்தில் சரியான அறை கிடைத்தது" என கூறியுள்ளது.