தியேட்டர் மீது ரஷ்யா குண்டு வீச்சு - 2400 பேர் உயிரிழப்பு..!

RussiaUkraineCrisis RussiaUkraineWar PeopleDeath RussiaBombed MovieTheatre
By Thahir Mar 17, 2022 10:15 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 22 ஆவது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது.தலைநகர் கீவ்,கார்கீவ்,மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது.

உக்ரைனின் முக்கிய நகராமான மரியுபோலில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாக இருந்த வருகிறது. துறைமுக நகரான மரியுபோலை உருகுலைக்கும் நோக்கத்தில் ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்துகிறது.

இந்நிலையில் மரியுபோலில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்யா படைகள் தடுத்து நிறுத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தநிலையில் மரியுபோல் நகரில் உள்ள சினிமா தியேட்டரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் அடைந்து இருந்தனர்.

அந்த தியேட்டர் மீது ரஷியா குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலில் தியேட்டர் முற்றிலும் சேதம் அடைந்து இருப்பதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அங்கிருந்த மக்களின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து மரியுபோல் உள்ளூர் கவுன்சில் வெளியிட்ட தகவலில் ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் தஞ்சம் அடைந்த தியேட்டரை அழித்து இருக்கிறார்கள்.

இதை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம் என்று கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆனால் தியேட்டர் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷியா மறுப்பு தெரிவித்து உள்ளது.

மரியுபோல் நகரில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 நாட்களாக தண்ணீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கிறார்கள் என்றும், இன்னும் அந்நகருக்குள் 4 லட்சம் பேர் சிக்கி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.