ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உக்ரைனின் முக்கிய அணுமின் நிலையம் - அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையம் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா தொடர்ந்து 10வது நாளாக அங்கு போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருவதால் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை நிறுத்த சொல்லி உலக நாடுகளும் வலியுறுத்து வருகின்றன.
இதனிடையே உக்ரைனில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஷியா அமைந்துள்ள பகுதியில் ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அது வெடித்தால்செர்னோபில் அணுஉலை பாதிப்பை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ரஷ்ய கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபைகள் கூட்டத்தில் விளக்கமளித்துள்ளது. அதில் சபோரிஷியா அணுமின் நிலையத்தை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தாக்குதல் நடத்தினார்கள் என்பது முற்றிலும் தவறான தகவல் என்றும், அதைச் சுற்றியுள்ள பகுதி ரஷ்ய வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து வெளியேறும் போது பயிற்சி நிலையத்தின் மீது தீக்கொளுத்தி விட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால் இதில் அணுமின் நிலையத்திலிருந்து எந்த விதமான கதிரியக்கமும் வெளியாகவில்லை என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.