14 பந்தில் அரைசதம் - காட்டடி அடித்து சாதனை படைத்த ரஸல்
கரீபியன் ப்ரீமியர் லீக்கில் அதிரடி வீரர் ஆண்ட்ரூ ரஸல் 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரைப் போல ஆண்டுதோறும் வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் ப்ரீமியர் லீக் என்னும் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 26 ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் சைண்ட் லூசியா கிங்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சைண்ட் லூசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.பேட்டிங்கை தொடங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ரஸல் 6 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஸல் இணைந்துள்ளார்.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சைண்ட் லூசியா அணி 17.3 ஓவரில் வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட்டானது. இதன்மூலம் ஜமைக்கா அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.