ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு தடையா? நீதிமன்றத்தில் வழக்கு
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கிருஸ்தவ மதத்தையும், அதை பின்பற்றுபவர்களையும் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கும் ருத்ர தாண்டவம் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனு, சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரிச்சர்ட், பிரபல இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்னும் இரு நாட்களில் அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ருத்ரதாண்டவம் திரைப்படம், மதமாற்றம், பி.சி.ஆர். சட்டத்தை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான இந்தத் திரைப்படத்தின் ஒரு வீடியோவில் கிருஸ்துவ பாதிரியார் ஒருவர் பண வசூலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோ வெளியான பிறகு ஏற்பட்ட சர்ச்சைகளின் தொடர்ச்சியாக ருத்ர தாண்டவம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
திரைப்படம் வெளியாக இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், ருத்ர தாண்டவத்திற்கு தடை கோரும் மனு தொடர்பாக நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என, திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்து மதத்தை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரானது ருத்ர தாண்டவம் திரைப்படம் என்று இயக்குநர் மோகன் G தெரிவித்திருந்தார்.
திமுக, பெரியார் என யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக தனது திரைப்படம் ருத்ரதாண்டவம் ஆடும் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இந்துக்களும் அல்லாமல் கிறிஸ்தவர்களும் அல்லாமல் சிலர் இந்து மதத்தை அழிக்க தீவிரமாக பணியாற்றுகிறார் என ஒரு பாதிரியார் சொன்னதன் அடிப்படையில், அதை கருப்பொருளாக வைத்து ருத்ர தாண்டவம் களமிறங்குகிறது.
ருத்ர தாண்டவம் படத்திற்கு முன்னதாக, இயக்குநர் மோகன் ஜி-இன் இயக்கத்தில் வெளியான திரெளபதி திரைப்படமும் பல விமர்சனங்களை எதிர்கொண்டது.
திரெளபதி திரைப் படத்தின் நாயகனான ரிச்சர்ட் தான் ருத்ர தாண்டவத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.