ருத்ரதாண்டவம் படம் பார்க்க சென்ற 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு - போலீசார் அதிரடி
ருத்ரதாண்டவம் படம் பார்க்க சென்ற போது ரகளையில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் 100க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தருமபுரியில் ருத்ரதாண்டவம் படம் பார்க்க ஊர்வலமாக சென்றபோது ரகளையில் ஈடுபட்டதாக பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோகன்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரதாண்டவம் திரைப்படம் தருமபுரியில் உள்ள இரு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதையொட்டி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெரியார் சிலையில் இருந்து திரையரங்கு நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
மேளதாளம் முழங்க சாலையில் நடனமாடிச் சென்ற அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினரை கண்டதும் பெரும்பாலானோர் சிதறி ஓடிய நிலையில், அதில் 5 பேரை கைது செய்த அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.