வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க.. அப்புறம் நாக்கு இருக்காது – ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த அமைச்சர்!
வாய்க்கு வந்ததெல்லாம் பேச வேண்டாம். பிறகு வாய்ல நாக்கு இருக்காது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலத்தில் மீண்டும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் களமிறங்கி இருக்கிறார். தன்னுடைய தொகுதியில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வன்னியர் இடஒதுக்கீட்டால் முக்குலத்தோர் எதிராகத் திரும்பியிருப்பதால், அந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது என சத்தியம் செய்திருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இந்நிலையில், நேற்று தனது ஆதரவாளர்களுடன் கல்லுப்பட்டியிலிருந்து திருமங்கலம் வரை 30 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அதிமுக அரசின் 10 ஆண்டு காலச் சாதனைகளை மக்களுக்கு விளக்கி கூறினார்.

அப்போது அவர் பேசுகையில், ”திமுகவினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரியுங்கள். நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களைச் சொல்லி வாக்கு கேளுங்கள்.
அவ்வாறு கேட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். அதை விட்டுவிட்டு தோல்வி பயத்தில் இல்லாததையும் பொல்லாததையும், இழுத்தும் பழித்தும் பேசினால், உங்கள் நாக்கு உங்களுக்குச் சொந்தமாக இருக்காது” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் விதத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசுகிறார் என திமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.