RSS அணிவகுப்பு விவகாரம்: திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

Thol. Thirumavalavan Madras High Court
By Thahir Sep 30, 2022 10:06 AM GMT
Report

RSS அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கும்படி நிபந்தனைகளுடன் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22ம் தேதி காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

RSS அணிவகுப்பு விவகாரம்: திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு | Rss March Case Judgment Postponed Case

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் மத நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்பந்தப்பட்டுள்ளதால் மறு ஆய்வு கோர உரிமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சனை.அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும்.

மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு உகந்ததல்ல அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் காவல் கண்காணிப்பாளரையோ,காவல் ஆணையரையோ எதிர்மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து எதிர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.