ஆர்.எஸ்.எஸ். தலைவருக்காக சாலை சீரமைக்க உத்தரவு - பதவி பறிபோன சோகம்!

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்காக சாலை சீரமைப்பு செய்ய உத்தரவிட்ட மதுரை உதவி ஆணையர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் சத்யசார் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று இரவு மதுரை வருகிறார்.

இதனால் அவர் செல்லும் வழிகளில் சாலைகளை சீரமைத்தல், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் உள்ளிட்ட பணிகளை கவனித்து செய்து முடித்திட அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி துணை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளானது. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், ‘அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்’என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மதுரை மாநகராட்சியில் உதவி ஆணையர் பணியில் பணிபுரிந்து வரும் சண்முகம் என்பவரை மதுரை மாநகராட்சி பணியிலிருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்