நேரடியாக மோதும் அண்ணாமலை - ஆர்.எஸ்.பாரதி : அரசியல் களத்தில் தொடரும் பரபரப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபகாலமாக திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளா் ஆர்.எஸ்.பாரதி, ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது திமுகவைப் போல கோழைத்தனமாக கண்டன நோட்டீஸ் கொடுப்பதல்லாம் எங்களுக்கு வராது என்றும், என் மீது திமுக எம்.பி. வில்சன் ரூ.10 கோடி, பி.ஜி.ஆர் நிறுவனம் ரூ.500 கோடி, ஆர்.எஸ்.பாரதி ரூ.100 கோடி, என மொத்தம் ரூ.610 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். அதற்கு நான் வொர்த் இல்லை. முடிந்தால் அடுத்த 6 மணி நேரம் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தான் இருப்பேன். முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, வடிவேலு காமெடி காட்சியில் சொல்வது போல “நான் ஜெயிலுக்கு போறேன்” என அண்ணாமலை கமலாலயத்தில் உட்கார்ந்துக் கொண்டு காமெடி செய்வதாகவும், ஒரு புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. இதுகூட தெரியாமல் அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என கேள்வியெழுப்பினார். மேலும் நேரம் வரும்போது அண்ணாமலை சிறைக்கு செல்வார் என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.