ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை அழித்த போலீசார்...!
பழனியில் அரசு தடையை மீறி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் அழித்தனர்.
பழனியில் தாலுகா மற்றும் சாமிநாதபுரம் காவல்நிலைய எல்லைகளுக்குள் பட்ட பகுதிகளில் கொரோனா காலங்களில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகளவில் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து மதுபாட்டில்கள்களையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை இன்று போலீசார் பழனி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போது குற்றவியல் நீதித்துறை நீதிபதி ரகுபதிராஜா மதுபானங்களை அழிக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து நீதிபதி முன்னிலையில் நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் குழிதோண்டி மதுபானங்களை கீழே கொட்டி அழிக்கப்பட்டது. தாலுகா காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் மதுபானங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.