ஆவின் பால் விலை குறைப்பால் ரூ.270 கோடி இழப்பு... பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்...
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டதால், அரசுக்கு ரூ.270 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் உற்பத்தி நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரடங்கு காலத்தில் தேவையான அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகள் களப்பணிகளை செய்து குதிரை வேகத்தில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் உத்தரவின் பெயரில் ஆவின் பால் விலை ரூபாய் மூன்று குறைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருவதாகவும், இதன்மூலம் ரூ. 270 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
இந்த இழப்பை சரி செய்யும் விதமாக கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆவின்பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஆவின்பால் மக்களை கூடுதலாக சென்று சேரும் வகையில் கூடுதல் விற்பனை நிலையங்கள் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் நாசர் கூறினார்.