“அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதல, பா.ஜ.க.விற்கு பயப்பட வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்ல” - ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை என்று தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார்.
திமுகவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் தற்போதைய இணை அமைச்சருமான எல்.முருகன் மீதான அவதூறு வழக்கு,
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கைத் தொடுத்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.பாரதி,
"தற்போதைய பாஜகவின் மத்திய அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல்,
வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முரசொலி அறக்கட்டளை குறித்தும், தி.மு.க.வினர் ஆதி திராவிடர் மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவதூறாக பேசியிருக்கிறார்.
அதில், முரசொலி பத்திரிக்கையின் மூலப்பிரதியை ஸ்டாலினால் காட்ட முடியுமா? என பேசினார். நான் முரசொலி பத்திரிக்கையின் மூலப்பிரதியை அவரிடம் காட்டியபோது அவரும் பரிசீலனை செய்தார்.
ஆனால், எல்.முருகன் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார். முன்னதாக, எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், விசாரணை துவங்குவதற்கு முன் அவர் எம்.பி ஆகிவிட்டார்.
அதனால் தற்போது வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. விசாரணையில், நான் பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என கூறியதுடன் எல்.முருகனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
முரசொலி பத்திரிக்கையின் மூலப்பிரதி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளோம். சம்மனுக்கு பின் அவர் ஆஜராகிய பிறகே தீர்ப்பு வழங்கப்படும்.
பா.ஜ.க.விற்கு பயப்பட வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு இல்லை. மாரிதாஸ் தொடர்பான அவதூறு வழக்கில் காவல் துறை மூலம் எப்.ஐ.ஆர் போடப்பட்டது முதல், என்னவெல்லாம் நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காக குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்க வேண்டும். அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை.
அண்ணாமலை தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு குறித்து தவறாக பேசியிருக்கிறார். இதிலிருந்தே அண்ணாமலை ஒழுக்கமான காவல்துறை அதிகாரி அல்ல என்பது தெரியவருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.