அதிமுகவுடன் திமுக கூட்டணி வைத்தால் என்ன தப்பு? ஆர்.எஸ்.பாரதி கேள்வி
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என்ன உலகமகா தப்பு என ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக - அதிமுக கூட்டணி?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
இதனிடையே சுமார் 50 ஆண்டுகளாக எதிரெதிர் துருவங்களாக இருந்து மாற்றி மாற்றி தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்த இரு பெரும் திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணியமைத்து ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடர வேண்டும் என்ற முறையில் திமுக அணியுடன் ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி பதிலடி
இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இது குறித்து அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் அதிமுகவுடன் பேசவும் இல்லை. கூட்டணியும் வைக்கவில்லை. ஆனால் இதைப்பற்றி CPIM பேசுவது தவறு.

அவங்க ஏற்கனவே அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து பலமுறை ராஜ்யசபா எம்பி எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். பாஜக ஒரு கொள்கை ரீதியாக எதிர் என்று சொல்கிறார்கள். அதே போல் கூட அதிமுகவை அவர்கள் கடந்த காலங்களில் சொன்னதில்லை.
தவெக உடன் போனதற்கு இதை ஒரு காரணமாக சொல்கிறார்கள். அங்கேயும் நிரந்தரமாக இருப்பார்கள் என சொல்ல முடியாது. ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு அணியுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி வைத்துள்ளது. போவார்கள் வருவார்கள். இதையெல்லாம் ஒரு 60 வருடமாக பார்த்து விட்டோம். அதிமுக ஏதோ தீண்டத்தகாத கட்சி போல் பேசுவது கம்யூனிஸ்ட்கள் பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது.
அப்படியே நாங்கள் கூட்டணி வைத்தாலும் அதில் என்ன உலக மகா தப்பு உள்ளது? CPI மற்றும் CPIM 1964 ஆம் ஆண்டில் உடைந்தது. அதன் பின்னர் இருவரும் ஒத்த கருத்துடன் போகவில்லையா? இரு கம்யூனிஸ்ட்கள் சேர்ந்தார்களா இல்லையா?
எங்களை விட்டு அவர்கள் பிரிந்து போய் 54 வருடங்கள் ஆகிவிட்டது. அதற்காக நாங்கள் கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லவில்லை. அதிமுக எங்களுக்கு பங்காளி. எங்களிடமிருந்து பிரிந்து போனவங்க தானே? எங்களுக்கு கொள்கை ரீதியாக பகையாளி என்பது பாஜக தான்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 50 ஆண்டுகளுக்குள் ஒன்று சேர்ந்து விட்டார்கள். ஆனால் நாங்கள் சேரவில்லை. ஆனால் நாங்கள் சேரவேண்டும் என இவர்கள் விரும்புகிறார்கள் போல " என தெரிவித்துள்ளார்.