மீண்டும்..மீண்டுமா? பார்மசி ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி - அதிர்ச்சியில் ஒருநாள் கோடீஸ்வரன்!
சென்னை பார்மசி ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி இருப்பு வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.753 கோடி இருப்பு
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் முகமது இத்ரிஸ். இவர் பார்மசி ஊழியராக உள்ளார். இத்ரிஸ் நேற்று தனது நபருக்கு 2000 ரூபாயை கோட்டக் வங்கிக்கணக்கின் மூலம் மாற்றியுள்ளார்.
அப்போது வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் 'வங்கி கணக்கில் ரூ.753 கோடி இருப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இத்ரீஸ் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு போனில் அழைத்து இதுகுறித்து கூறியுள்ளார்.
உடனடியாக அதிகாரிகள் முகமது இத்ரிஸின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர்.
அடிக்கடி நடக்கும் சம்பவம்
ஆனால் இதுகுறித்து விளக்கம் கேட்டும் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று இத்ரிஸ் கூறினார். மேலும் வங்கி கணக்கை முடக்கியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்குக்கு ரூ.9,000 கோடி ரூபாயும், நேற்று தஞ்சாவூரை சேர்ந்த கணேசன் என்பவரது வங்கி கணக்கில் 756 கோடி ரூபாயும் இருப்பு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.