இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 - பிரியங்கா காந்தி அதிரடி அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால், ‘இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்’ என்ற வாக்குறுதியை பிரியங்கா காந்தி பெங்களூருவில் இன்று அறிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தல்
பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவை நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத போதும், அரசியல் கட்சிகள் வரிந்துகொண்டு களத்தில் இறங்கியுள்ளன.
பாஜக, காங்கிரஸ் என மாநிலத்தின் பிரதான இரு கட்சிகளும் இவற்றில் முன்நிற்கின்றன. இந்த வகையில் பெங்களூருவில் ’நா நாயகி’(நான் தலைவி) என்ற தலைப்பிலான நிகழ்வில், கர்நாடக இல்லத்தரசிகளுக்கு பயனளிக்கும் ’க்ருஹ லக்ஷ்மி யோஜனா’ என்ற திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி அறிவித்தார்.
’காஸ் சிலிண்டர் உட்பட உயரும் விலைவாசியை எதிர்கொள்ளும் வகையிலும், மகளிருக்கான பொருளாதார சுதந்திரம் மற்றும் சொந்தக் காலில் நிற்றல் உள்ளிட்ட நோக்கங்களோடும்’ இந்த திட்டத்துக்கான வாக்குறுதியை காங்கிரஸ் அறிவிப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000
’இதன் மூலம் மாநிலத்தின் 1.5 கோடிக்கும் மேலான மகளிர் பயனடைவார்கள் என்றும் இதன் மூலம் கர்நாடக மகளிர் வாழ்க்கை மேம்படும்’ என்றும் பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு மாதம் குறிப்பிட்டத் தொகை வழங்கும் யோசனையை தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி முதலில் விவாதித்தது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவித்து ஆட்சிக்கு வந்தது.
இன்றைக்கும் திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் ஒன்றாக ‘இல்லத்தரசிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத் தொகை’ நீடிக்கிறது. இதே வாக்குறுதியை இரட்டிப்பாக்கி, ரூ.2000 என கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் அறிவித்துள்ளது.