மாஸ்கை கழற்றிய இங்கிலாந்து இளைஞருக்கு நேர்ந்த கதி - நொந்துபோன மக்கள்
இங்கிலாந்தில் முகக்கவசத்தை கழட்டியதற்காக நபர் ஒருவருக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனாவின் தீவிரம் அவ்வப்போது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதை தொடர் நிகழ்வாக கொண்டுள்ளது. இதனால் உலக நாடுகள் தங்கள் மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் கொரோனாவின் தீவிரம் மற்றும் அபராத தொகை காரணமாக கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி வருகின்றனர்.
இதனிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஓ’டூல் என்ற நபர் ப்ரெஸ்காட்டில் உள்ள பி அண்ட் எம் என்ற ஸ்டோருக்கு சில பொருட்களை வாங்குவதற்காக முகக்கவசம் அணிந்து சென்றுள்ளார்.
கடைக்குள் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சில விநாடிகளுக்கு தனது முகக்கவசத்தை கழட்டி மாட்ட நினைத்துள்ளார்.வெறும் 16 விநாடிக்கு தனது மாஸ்க்கை கழட்டி சத்தமில்லாமல் மீண்டும் பழைய நிலைக்கு மாட்டிக்கொண்டுள்ளார்.
அந்த நேரத்தில் கடைக்குள் நுழைந்த போலீசார் அவர் மாஸ்க் இல்லாமல் இருப்பதை பார்த்துள்ள நிலையில் கிறிஸ்டோபர் தனது நிலையை விளக்கியுள்ளார். இதனை ஏற்க மறுத்த போலீசார் ACRO குற்றப் பதிவு அலுவலகத்திலிருந்து கிறிஸ்டோபருக்கு 100 டாலர் அபராதம் செலுத்த உத்தரவிட்டு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தான் எந்த தவறும் செய்யவில்லை என விளக்கி மெயில் அனுப்பிய கிறிஸ்டோபருக்கு அடுத்ததாக கடிதம் வந்தது. அதில் வெறும் 16 விநாடிகள் மாஸ்க் அணியாததற்காக 2 ஆயிரம் டாலர் ( ரூ.2 லட்சம்) கட்ட சொல்லி தெரிவித்துள்ளனர். இதனால் கிறிஸ்டோபர் மட்டுமல்லாமல் அந்நாட்டு மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.