உள்ளாடையில் 4 கிலோ தங்க பசை; கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர் - போலீசார் அதிரடி!
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தை உள்ள கழிவறைக்கு சென்ற விமான நிலைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் நீண்ட நேரத்திற்கு பிறகு வெளியே வந்துள்ளார். இதனைக் கண்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் 'பிரசாந்த் குமார்' தலைமையிலான போலீசார், அந்த விமான ஊழியரை கண்காணித்து, பாதுகாக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி விசாரணை செய்து, பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தினர்.
அதில், அவர் பெயர் சஞ்சய் என்றும் அவரது உள்ளாடையில் 3 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் ரூ.2 கோடி மதிப்புள்ள 3 கிலோ 930 கிராம் தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
சப் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் "துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த முகமது நிஸ்தார் அபூசாலி (32) என்பவர் தங்கத்தை கடத்தி வந்ததும், பின்னர் அதை தனியார் நிறுவன ஊழியர் மூலம் கழிவறையில் பரிமாறிவிட்டு கொழும்பு விமானத்தில் பயணம் செய்ய இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து முகமது நிஸ்தார் அபூசாலி, கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர் ஆகியோரை மேல் நடவடிக்கைக்காக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் தங்கம் கடத்தலை கண்டுபிடித்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் குமாரை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.