கடந்தாண்டை விட குறைந்தது புத்தாண்டு மது விற்பனை - என்ன காரணம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு மது விற்பனை குறைந்துள்ளது.
தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். பொதுவாக பண்டிகை நாட்கள் வந்தால் தமிழகத்தில் மது விற்பனை அதிகரிக்கும்.குறிப்பாக தீபாவளி மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.100 கோடிக்கு வியாபாரம் நடக்கும்.
இதனிடையே 2021 ஆம் ஆண்டு நிறைவு பெற்று 2022 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை நேற்றிரவு பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். வழக்கமாக ஒவ்வொரு புத்தாண்டிலும் மது விற்பனை களைகட்டும் நிலையில் இந்த முறையும் மது விற்பனை சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நேற்று (டிசம்பர் 31) ஒரே நாளில் தமிழ்நாட்டில் ரூ. 148 கோடிக்கு மதுவகைகள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.153 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்தாண்டு வருவாய் குறைந்துள்ளது.
கொரோனா பரவலால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை, கனமழை, சபரிமலை சீசன் என இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது. சென்னை மண்டலத்தில் ரூ.41.45 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.26.52 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.25.43 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.27.44 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.26.85 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.