உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

M. K. Stalin Chennai Tamil Nadu Police
By Thahir Apr 26, 2022 07:32 AM GMT
Report

காவல்நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை மாநகர காவல்துறையில் இரவு வழக்கமாக மேற்கொள்ள கூடிய வாகன சோதனையின் போது சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்,சுரேஷ் வந்த ஆட்டோவை கெல்லிஸ் அருகே காவல்துறையினர் நிறுத்தினர்.

கஞ்சா போதையில் இருந்த அவர்களை போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது வாகனத்தையும்,அவர்களை சோதனை செய்தனர். சோதனையில் கஞ்சா,மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.பின்னர் அவர்களை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.

அப்போது விக்னேஷ் என்பவர் காவல்நிலையத்திற்கு வர மறுத்திருக்கிறார்.மறுத்தது மட்டுமில்லாமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல்துறையினர் குத்த முயற்சித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். ஆட்டோவில் இருந்த கஞ்சா மற்றும் மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கும் பதிவு செய்தனர்.

இவர்களின் பின்புலத்தை எப்ஆர்எஸ் என்ற செயலில் மூலம் ஆய்வு செய்த போது சுரேஷ் மீது 11 வழக்குகளும்,விக்னேஷ் மீது 2 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

கடந்த 19 ஆம் தேதி அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.அப்போது விக்னேசுக்கு வாந்தி மயக்கம்,வலிப்பு ஏற்பட்டுள்ளது.

உடனே அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோததித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து இறப்பின் மீது சந்தேகம் என வழக்குப்பதிவு செய்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது.

விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படி முறையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்,சுரேஷின் உயர்சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.