3வது சதம் விளாசிய ஜோஸ் பட்லர் - டெல்லி அணிக்கு எதிராக ராஜஸ்தான் த்ரில் வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
வான்கடே மைதானத்தில் நடந்த 34வது ஐபிஎல் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் ஜோடி தொடக்கத்திலேயே அதிரடி காட்ட தொடங்கினர்.
டெல்லி அணியின் பந்துவீச்சை இருவரும் துவம்சம் செய்த நிலையில் ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய படிக்கல் 54 ரன்களில் அவுட்டாக, மறுபுறம் ருத்ரதாண்டவம் ஆடிய ஜோஸ் பட்லர் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் 3வது சதம் அடித்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் அவர் தொடர்ச்சியாக பட்லர் அடிக்கும் 2வது சதமாகும். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.பட்லர் 106 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியில் வார்னர் 28, ப்ரித்வி ஷா 37, கேப்டன் பண்ட் 44, லலித் யாதவ் 37 எடுக்க சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் விழுந்தன. கடைசி 3 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. 19வது ஓவரை வீசிய பிரஷித் கிருஷ்ணா லலித் யாதவ் விக்கெட்டை கைப்பற்றியதோடு அந்த ஓவரை மெய்டனாக்கினார்.
இதனால் கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஓபெய் மெக்க்கோய் வீச பவல் முதல் 3 பந்துகளில் சிக்சர்களை விளாசினார். ஆனால் அடுத்த 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்த நிலையில் பவல் அவுட்டானார். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் 5வது வெற்றியை பதிவு செய்தது.