பஞ்சாப் அணியை பஞ்சராக்கிய கார்த்திக் தியாகி - கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.
14வது ஐபிஎல் சீசனின் இன்று நடைபெற்ற 32வது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் எவின் லீவிஸ் 36 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களும், ஹிபால் லோம்ரர் 43 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 25 ரன்களும் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 185 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷான் பொரெல் மற்றும் ஹர்பிரீத் பிரார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயாங்க் அகர்வாலும், கேப்டன் கே.எல்.ராகுலும் ராஜஸ்தான் பந்துவீச்சை விளாசி தள்ளினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 120 ரன்கள் குவிக்க ராகுல் 49 ரன்களிலும், மயாங்க் அகர்வால் 67 ரன்களும் எடுக்க பஞ்சாப் அணி எளிதில் வெற்றிப் பெறும் என ரசிகர்கள் நினைத்தனர்.
கடைசி ஒரு ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 4 ரன்களை தேவை என்ற நிலை ஏற்பட்டது. 180 ரன்களை அசால்டாக எடுத்த பஞ்சாப் அணிக்கு இது பெரிய தூரம் இல்லை என பஞ்சாப் ரசிகர்கள் வெற்றியை கொண்டாட தயாரான நிலையில் அவர்களுக்கு எமனாக வந்தார் ராஜஸ்தான் வீரர் கார்த்திக் தியாகி.
கடைசி ஓவரை வீசிய அவர் வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுகொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி பஞ்சாப் அணியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் ஷாக் கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.