சிஎஸ்கேவை கிழித்தெடுத்த ஜெய்ஸ்வால் - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடைபெற்ற 47வது போட்டியில் ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை தொடக்கம் முதலே அடித்து விளையாடியது.
தொடக்க வீரர் டூ பிளிசிஸ் 25 ரன்கள், சுரேஷ் ரெய்னா 3 ரன்கள், மொயீன் அலி 21 ரன்கள், அம்பத்தி ராயுடு 2 ரன்கள் என ஒருபுறம் அவுட்டாக, மறுபுறம் ருத்துராஜ் ஜெய்க்வாட் சதமடித்து அசத்தினார். அவருக்கு பக்கப்பலமாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் விளாசினார்.இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ராகுல் திவேதியா அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சென்னை அணியின் பந்துவீச்சை கிழித்தெடுத்தார். சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி ரன் குவிப்பில் ஈடுபட்ட அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். மற்றொரு வீரர் லூயிஸ் 27 ரன்கள் எடுத்தார்..
தொடர்ந்து களம் கண்ட கேப்டன் சஞ்சு சாம்சன் 28 ரன்களில் அவுட்டாக, மறுபுறம் ஷிவம் துபே சென்னை அணிக்கு மரண அடி கொடுத்தார். 64 ரன்கள் விளாசிய அவர் அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். 17.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் தொடந்து நீடிக்கிறது.