மகனை பிரிந்த சோகம்...அதிகரித்த குடிப்பழக்கம்..ரகுவரன் குறித்து அவரது சகோதரர் உருக்கம்
மிகவும் பிரபலமாக இருந்து வந்த ரகுவரனின் மரணம் குறித்து அவரது சகோதரர் சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ரகுவரன்
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு இணையாக பிரபலமாக இருந்தவர் ரகுவரன். ரஜினியில் துவங்கி விஜய், அஜித், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்துள்ளவர்.
இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான "யாரடி நீ மோகினி" படத்தில் நடித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். 2008-ஆம் ஆண்டு தனது 49 வயதில் ரகுவரன் மரணமடைந்திருந்தாலும், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவே அவர் இருந்து வருகின்றார்.
மகனை பிரிந்த சோகம்
இந்நிலையில் தான் தற்போது, அவரின் மரணம் குறித்து அவரது சகோதரர் ரமேஷ்வரன் உருக்கமாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியில், "ரகுவரனின் மரணத்திற்கு அதிகளவு மது அருந்தியது தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் அவர் மரணத்திற்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம்" என்று அவர் கூறினார்.
"ரகுவரன் கடைசியாக நடித்த 'யாரடி நீ மோகினி' படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த பின்னர் அவர் யாருடனும் பேசாமல் மிகுந்த மன சோர்வோடு காணப்பட்டது, தனக்கு மிகுந்த கவலையை அளித்தது என்று ரமேஷ்வரன் கூறியிருக்கிறார்.
மகன் ரிஷிவரன்
"யாரடி நீ மோகினி" படத்தில் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்குமாறு அணுகிய போது, படத்தின் கதை பிடித்துப்போனதாலும், தனுஷின் கதாபாத்திரம், அவரது மகன் ரிஷிவரனை நினைவுக்கூரிய காரணத்தால் தான் ரகுவரன் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரகுவரனுக்கும் நடிகை ரோகிணிக்கும் கடந்த 1996-ஆம் ஆண்டு திருமண நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அடுத்த 8 ஆண்டுகளிலேயே பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ரிஷிவரன் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.