முஸ்லீம் என்பதால் கொலையா? ஓடும் ரயிலில் துப்பாக்கியால் சுட்ட ஆர்பிஎப் அதிகாரிக்கு மனநல பாதிப்பு இல்லை..!
மகராஷ்டிராவில் ஓடும் ரயிலில் உதவி ஆய்வாளர் உள்பட 3 முஸ்லீம் பயணிகளை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு மனநல பாதிப்பு இல்லை என்ற தகவல் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு
மகாராஷ்டிரா பால்கர் ரயில் நிலையம் அருகே கடந்த திங்கள்கிழமை அதிகாலை, ஜெய்பூர் - மும்பை சென்ட்ரல் விரைவு ரயில் மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த ரயிலில் பாதுகாப்பு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சேத்தன் சிங் (34), உயரதிகாரியான உதவி ஆய்வாளர் டீகாராம் மீனா, அப்துல் காதிர்பாய் முகமது ஹுசேன் பான்பூர்வாலா (48), அக்தர் அப்பாஸ் அலி (48), சதர் முகமது உசேன் ஆகிய 3 பயணிகள் என 4 பேரை தன்னிடம் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
ரயிலில் இருந்து தப்பியோடிய அவரை மகாராஷ்டிரா அரசு ரயில்வே போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போரிவலி அரசு ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநல பாதிப்பு இல்லை?
சம்பவத்தில் தொடர்புடைய காவலர் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்களில் செய்தி பரவியது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த புதன்கிழமை இந்திய ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, குறிப்பிட்ட காவலரின் கடைசி மருத்துவ பரிசோதனையில் அத்தகைய எந்த மனநலப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
உரிய விளக்கம் ஏதுமின்றி சில மணி நேரங்களில் அந்த அறிக்கை திரும்ப பெறப்படுவதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.