இன்னும் ஒரு மேட்சில் சென்னை அணி தோற்றால் அவ்வளவு தான் - முன்னாள் வீரர் எச்சரிக்கை
ஐபிஎல் தொடரை மிக மோசமாக தொடங்கியுள்ள சென்னை அணிக்கு முன்னாள் இந்திய வீரர் ஆர்.பி.சிங் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள், இந்நாள் சாம்பியன்களான மும்பை, சென்னை அணிகள் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் தோல்வியை தழுவியது.
குறிப்பாக கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாக மாறி விட்டது என்றே கூறலாம். கேப்டன்சி மாற்றம், அணியில் பந்துவீச்சாளர்கள் இல்லாதது, நட்சத்திர வீரர்கள் சரியாக விளையாடதது என அந்த அணி ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில் சென்னை அணிக்கு இந்திய முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் 3 போட்டிகளில் தோல்வியடைந்ததில் இருந்து சென்னையின் நிலைமை புரிகிறது. அவர்கள் இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட டாப் 4 அணிகளில் இடம்பிடித்து ப்ளே ஆஃப் செல்வது கடினமாகிவிடும். ஏனென்றால் அவர்களின் ரன் ரேட் மிகவும் மோசமாக உள்ளது என கூறியுள்ளார்.
மேலும் இந்தாண்டு 10 அணிகள் விளையாடுவதால், எத்தனை புள்ளிகள் எடுத்தால் ப்ளே ஆஃப்-க்கு தகுதி என கணிக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு போட்டியையும் முக்கியமாக கருதி ஆட வேண்டும் என ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.