ரஷ்ய ஜனாதிபதி புடினின் முட்டாள்தனமான தவறு... அபாயகரமான போரைத் தூண்டக்கூடும்: எச்சரிக்கும் முன்னாள் தளபதி

Russia Warning Ukraine War Vladimir Putin
By Arbin Apr 13, 2021 05:14 PM GMT
Report

உக்ரைன் மீது படையெடுக்கும் முட்டாள்தனமான தவறை ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்னெடுத்தால், கண்டிப்பாக நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கும் என பிரித்தானியாவின் முன்னாள் கடற்படை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய ஜனாதிபதி புடினின் தவறான கணக்கீடை கடுமையாக விமர்சித்துள்ள அட்மிரல் லார்ட் வெஸ்ட், அது பேராபத்தில் முடியும் என்றார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களமிறங்கும் என அதன் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் உறுதி அளித்துள்ள நிலையிலேயே, பிரித்தானியாவின் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் லார்ட் வெஸ்ட் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான சூழல் அச்சுறுத்தலாகவும் மிகவும் கவலைப்பட வேண்டியதாகவும் உள்ளது என்றார் அட்மிரல் லார்ட் வெஸ்ட். ரஷ்யா மிகப்பெரிய படை ஒன்றை எல்லையில் குவித்துள்ளது மட்டுமின்றி, போரைத் தூண்டும் வகையிலான கருத்துக்களையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது என்றார் அவர்.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் முட்டாள்தனமான தவறு... அபாயகரமான போரைத் தூண்டக்கூடும்: எச்சரிக்கும் முன்னாள் தளபதி | Royal Navy Chief Warns

உக்ரேனிய எல்லையில் 80,000 துருப்புக்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதால், உக்ரைன் இறையாண்மையைக் காக்க இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உறுதியளித்துள்ளன.

தற்போதைய சூழலில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஒரு தவறான முடிவு என்பது, உலக நாடுகள் கண்டிப்பாக எதிர்வினையாற்றும் என்பதில் சந்தேகமில்லை என்றார் அட்மிரல் லார்ட் வெஸ்ட்.

சர்வசாதாரணமாக ஒரு நாட்டை நீங்கள் ஆக்கிரமிக்க முடிந்தால் அது உலகிற்கு ஒரு பயங்கரமான பாடமாக இருக்கும். ரஷ்யா முன்யோசனை ஏதுமின்றி உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்றால், அடுத்து என்ன செய்வது என்பது பற்றி மற்ற நாடுகளிடையே ஒரு பயங்கரமான முடிவு எட்டப்படும் என்பது உறுதியான ஒன்று என்கிறார் அட்மிரல் லார்ட் வெஸ்ட்.

ஒருமுறை போர் மூளத் தொடங்கியவுடன், கண்டிப்பாக அதை நிறுத்த முடியாமல் போகும் ஆபத்து உள்ளது என்றார் அட்மிரல் லார்ட் வெஸ்ட்.